திருஞானசம்பந்தர் தேவாரம் |
மூன்றாம் திருமுறை |
3.82 திருஅவளிவநல்லூர் - திருவிராகம் பண் - சாதாரி |
கொம்பிரிய வண்டுலவு கொன்றைபுரி நூலொடு குலாவித்
தம்பரிசி னோடுசுடு நீறுதட வந்திடப மேறிக்
கம்பரிய செம்பொனெடு மாடமதில் கல்வரைவி லாக
அம்பெரிய வெய்தபெரு மானுறைய தவளிவண லூரே.
|
1 |
ஓமையன கள்ளியன வாகையன கூகைமுர லோசை
ஈமம்எரி சூழ்சுடலை வாசமுது காடுநட மாடித்
தூய்மையுடை அக்கொடர வம்விரவி மிக்கொளி துளங்க
ஆமையொடு பூணும்அடி கள்ளுறைவ தவளிவண லூரே.
|
2 |
நீறுடைய மார்பில்இம வான்மகளொர் பாகம்நிலை செய்து
கூறுடைய வேடமொடு கூடியழ காயதொரு கோலம்
ஏறடைய ரேனுமிடு காடிரவில் நின்றுநட மாடும்
ஆறடைய வார்சடையி னான்உறைவ தவளிவண லூரே.
|
3 |
பிணியுமிலர் கேடுமிலர் தோற்றமிலர் என்றுலகு பேணிப்
பணியும்அடி யார்களன பாவம்அற இன்னருள் பயந்து
துணியுடைய தோலுமுடை கோவணமும் நாகமுடல் தொங்க
அணியுமழ காகவுடை யானுறைவ தவளிவண லூரே.
|
4 |
குழலின்வரி வண்டுமுரல் மெல்லியன பொன்மலர்கள் கொண்டு
கழலின்மிசை யிண்டைபுனை வார்கடவு ளென்றமரர் கூடித்
தொழலும்வழி பாடுமுடை யார்துயரு நோயுமில ராவர்
அழலுமழு ஏந்துகையி னானுறைவ தவளிவண லூரே.
|
5 |
துஞ்சலில ராயமரர் நின்றுதொழு தேத்தஅருள் செய்து
நஞ்சுமிட றுண்டுகரி தாயஎளி தாகியொரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்துமை நடுங்கஅக லத்தொடு வளாவி
அஞ்சமத வேழவுரி யானுறைவ தவளிவண லூரே.
|
6 |
கூடரவ மொந்தைகுழல் யாழ்முழவி னோடும்இசை செய்யப்
பீடரவ மாகுபட ரம்புசெய்து பேரிடப மோடுங்
காடரவ மாகுகனல் கொண்டிரவில் நின்றுநட மாடி
ஆடரவம் ஆர்த்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
7 |
ஒருவரையும் மேல்வலிகொ டேனென எழுந்தவிற லோன்இப்
பெருவரையின் மேலொர்பெரு மானுமுள னோவென வெகுண்ட
கருவரையும் ஆழ்கடலும் அன்னதிறல் கைகளுடை யோனை
அருவரையி லூன்றியடர்த் தானுறைவ தவளிவண லூரே.
|
8 |
பொறிவரிய நாகமுயர் பொங்கணைய ணைந்தபுக ழோனும்
வெறிவரிய வண்டறைய விண்டமலர் மேல்விழுமி யோனுஞ்
செறிவரிய தோற்றமொடு ஆற்றல்மிக நின்றுசிறி தேயும்
அறிவரிய னாயபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
9 |
கழியருகு பள்ளியிட மாகவடு மீன்கள்கவர் வாரும்
வழியருகு சாரவெயில் நின்றடிசி லுள்கிவரு வாரும்
பழியருகி னாரொழிக பான்மையொடு நின்றுதொழு தேத்தும்
அழியருவி தோய்ந்தபெரு மானுறைவ தவளிவண லூரே.
|
10 |
ஆனமொழி யானதிற லோர்பரவும் அவளிவண லூர்மேல்
போனமொழி நன்மொழிக ளாயபுகழ் தோணிபுர வூரன்
ஞானமொழி மாலைபல நாடுபுகழ் ஞானசம் பந்தன்
தேனமொழி மாலைபுகழ் வார்துயர்கள் தீயதிலர் தாமே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |